திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஓய்வு பெற்ற மூத்த அர்ச்சகர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் சீனிவாசமூர்த்தி தீட்சிதர் (75). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரிசோதனையில் தெரிய வந்தது. அவர் திருப்பதியில் உள்ள தேவஸ்தான சிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சீனிவாசமூர்த்தி தீட்சிதர் நேற்று இறந்தார். தேவஸ்தானம் சார்பில் சம்பிரதாய முறைப்படி சந்தனகொம்பு, பரிவட்டம், தீக்குச்சி, மேளம், நாதஸ்வரம் உள்ளிட்டவை அடங்கிய பொருட்கள் ஏழுமலையான் கோயிலில் இருந்து பேடி ஆஞ்சநேயர் கோயில் பின்புறத்தில் இறந்த தீட்சிதரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இதற்கிடையே, ஏழுமலையான் கோயிலில் பணிபுரியக்கூடிய 50 அர்ச்சகர்களில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏழுமலையான் கோயிலில் பூஜைகள் செய்வதற்கு அர்ச்சகர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இருந்து 5 அர்ச்சகர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்  கூடுதல் அர்ச்சகர்கள் தேவையென்பதால் திருச்சானூர் மற்றும் இதர தேவஸ்தான கோயில் அர்ச்சகர்களை ஏழுமலையான் கோயிலுக்கு தற்காலிகமாக பணியிடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: