பிசிசிஐ பொது மேலாளர் சபா கரீம் ராஜினாமா

மும்பை: பிசிசிஐ தலைமை செயல் அதிகாரியாக இருந்த ராகுல் ஜோரி பதவி விலகியதை தொடர்ந்து, பொது மேலாளராக இருந்த சபா கரீமும் பதவி விலகியுள்ளார். பிசிசிஐ நிர்வாகப் பொறுப்புக்கு சவுரவ் கங்குலி உள்ளிட்டவர்கள் புதிதாக வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் நிர்வாகத்தில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆறேழு மாதங்களாக எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்த ராகுல் ஜோரி கடந்த வாரம் பதவி விலகினார். அவரது பதவி விலகல் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிசிசிஐ நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால்தான் அவர் பதவி விலகியதாக கூறப்பட்டது.

ஆனால் அதுகுறித்து இரு தரப்பும் உறுதி செய்யவில்லை. ஆனால் பொது மேலாளர் சபா க்ரீம் பதவி விலக வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாக நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று பதவி விலகல் கடிதத்தை நிர்வாகிகளுக்கு சபா கரீம் அனுப்பி வைத்தார். இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான இவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 34 ஒருநாள் மற்றும் 120 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில், போட்டிகள் மற்றும் பயிற்சிக்காக இளஞ்சிவப்பு பந்துகளை போதுமான அளவுக்கு வாங்கவில்லை என்று கரீம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனை பிசிசிஐ தலைவர் கங்குலி வெளிப்படையாகவே கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: