தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்ததற்கு ரூ1 கோடி நிலுவைத்தொகையை வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு

* வியாபாரிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள்

* மகளின் இதய அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் விவசாயி

வந்தவாசி: வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நெல் கொள்முதல் செய்ததற்கு, வியாபாரி ஒருவர் ரூ1 கோடி பாக்கி வைத்துள்ளதாகவும், அவருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாஞ்சரை, தென்தின்னலூர், மழையூர், அரியம்பூண்டி, சீயமங்கலம், வெடால், சித்தருகாவூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை, கடந்த மே மாதம் முதல் சேத்துப்பட்டு,  மழையூர்,  தேசூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 வியாபாரிகள் தான் கொள்முதல் செய்கின்றனர்.

இதுவரையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ததற்கு, ₹2 கோடி வரை நிலுவைத்தொகை உள்ளது. இதில் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரி மட்டும் ₹1 கோடி வரை நிலுவை வைத்துள்ளதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரிடம் முறையிட்டால் தகுந்த பதில் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறாராம்.  நெல் மூட்டைகளை கொள்முதல் செய்த நாட்களில் அதற்கான பணத்தை வழங்க வேண்டும். ஆனால் தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வியாபாரிகளுக்கு ஆதரவாக அலுவலர்கள் செயல்படுவதால் பணம் நிலுவையில் உள்ளது என விவசாயிகள் கருதுகின்றனர்.

கடந்த ஓராண்டாகவே இதுபோன்று தாமதமாக பணம் தருவது வியாபாரிகளுக்கு வாடிக்கை ஆகிவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், முலப்பட்டு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற விவசாயியிடம், கடந்த மே மாதம் நெல் கொள்முதல் செய்ததற்கு, ஒரு வியாபாரி ₹80 ஆயிரம் பாக்கி வைத்துள்ளாராம். அதேபோல், சீயமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், கோவனந்தல் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் ஆகியோருக்கு தலா ₹30 ஆயிரம் வரை பாக்கி உள்ளதாம். மேலும், திரக்கோயில் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர், தனது 4 வயது மகள் பூஜாவுக்கு, இதயத்தில் ஓட்டை உள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பணம் வேண்டும் என பலமுறை கேட்டும் இதுவரையில் நிலுவைத்தொகையை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மற்றும் கணக்காளரிடம் பலமுறை எடுத்து கூறியும் முறையான பதில் அளிக்காமல் அழைக்கழித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: