விருத்தாசலம் அருகே 'அதிமுகவினர் தன்னை பணியாற்ற விடுவதில்லை'என 'வாட்ஸ் ஆப்'மூலம் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி தலைவர் கண்ணீர் மல்க புகார்!!!

கடலூர்:  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அதிமுகவினர் தன்னை பணியாற்ற விடுவதில்லை என மாவட்ட ஆட்சியரிடம் வாட்ஸ் ஆப் மூலம் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பணி செய்யாமல் தடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தீக்குளிக்க போவதாக ஊராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விருத்தாசலம் அருகே கம்மாபுர ஒன்றியம் பெரியகாப்பான்குளம் ஊராட்சியில் தமிழ்செல்வி என்பவர் வசித்து வருகிறார்.

அவர் தற்போது ஊராட்சி மன்ற தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்த அதிமுகவினர் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், அலுவலகத்தில் இருந்து கொண்டு கையெழுத்தை மட்டும் போடுமாறும்  கூறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஊராட்சியில் பலமுறை பணிகளை தொடங்கும் போதும் அதிமுகவினர் தடுப்பதோடு மட்டுமல்லாமல் கடுமையாக மிரட்டுவதாகவும் தமிழ்செல்வி கூறியுள்ளார். மேலும்,  பெண் ஊராட்சி தலைவர் என்பதால் அதிமுகவினர் தன்னை அவமரியாதையாக நடத்துவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை இடையூறு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். இல்லையெனில் தீக்குளிக்க போவதாகவும் அவர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குரல் பதிவை அனுப்பியுள்ளார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில், தனது புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் தொலைபேசியில் தன்னிடம் விசாரணை நடத்தியதாக தமிழ்செல்வி கூறியுள்ளார். இதற்கு அப்பகுதி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: