நீலகிரி வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை விதித்த மேலாளரை கண்டித்து கொட்டும் மழையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசுவதற்கு தடை விதித்ததை கண்டித்து தொழிலாளர்கள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அருவங்காட்டில் ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 20 அம்ச கோரிக்கைகளுடன் பொதுமேலாளரை தொழிற்சங்கத்தினர் சந்தித்தனர்.

அப்போது உயரதிகாரிகளுடன் தமிழில் பேச கூடாது என்று பொதுமேலாளர் கூறியுள்ளனர். மேலும் கோரிக்கைகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் தமிழில் பேசியதால், பொது மேலாளர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கொட்டும் மழையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மேலாளர் சஞ்சய் வாக்லு மொழி பெயர்பாளரின்றி பேச்சுவார்த்தைக்கு வந்ததாக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழில் பேச தடைவிதித்த மேலாளர் மன்னிப்பு கேட்டும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். உயர் பொறுப்பில் தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: