இடைவெளியை கடைபிடிக்காததால் டாஸ்மாக் கடை திடீர் மூடல்: குடிமகன்கள் ஏமாற்றம்

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால், கோட்டாட்சியர் திடீரென கடையை மூட உத்திரவிட்டார். கடை திடீரென மூடப்பட்டதால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர். மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடை நகராட்சியின் முக்கிய பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதனால், இந்த கடையில் எப்போதும் குடிமகன்களின் கூட்டம் நிறைந்து காணப்படும். இங்கு, விற்பனையாளர்களும், குடிமகன்களுக்கும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் மதுராந்தகம் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா அவ்வழியாக சென்றார். அப்போது, குடிமகன்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நின்று கொண்டு இருப்பதைக்கண்டு திடீரென அங்கு சென்று பார்வையிட்டார். மேலும், கடையின் விற்பனையாளர்களும் போதிய இடைவெளி விட்டு விற்பனையில் ஈடுபடாமல் இருந்தது தெரியவந்தது. எனவே, உடனடியாக கடையை மூட கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் மதுபான கடை மூடப்பட்டது. திடீரென டாஸ்மாக் மூடப்பட்டதால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர். டாஸ்மக் கடை இன்று திறக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பில் குடிமகன்கள் உள்ளனர்.

Related Stories: