தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கூட்டாளி சரீத்திற்கு இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் மரணத்தில் நேரடி தொடர்பு? : என்.ஐ.ஏ அதிரடி விசாரணை!!!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் புயலை கிளம்பியுள்ள தங்கக்கடத்தல் விவகாரத்தில் சிக்கி இருக்கும் கும்பலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னாவுடன் கைதான அவரது கூட்டாளி சரீத்திற்கு இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் மரணத்தில் நேரடியாக தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன.

கேரளாவில் இளம் இசையமைப்பாளராக திகழ்ந்த பாலபாஸ்கர் கடந்த 2018ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அப்போது அதில் அவரது மகளும் உயிரிழக்க, மனைவி மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து நடந்த இடத்தில் ஸ்வப்னாவின் கூட்டாளி சரீத் நின்றிருந்ததை, பாலபாஸ்கரின் நண்பரான கலாபவன் ஷோபி பார்த்துள்ளார்.

தற்போது, ஊடகங்கள் வாயிலாக சரீத் வெளி உலகிற்கு அடையாளம் தெரிந்திருப்பதால், அவரை பாலபாஸ்கரின் நண்பரான கலாபவன் ஷோபி அடையாளம் கண்டிருக்கிறார். இதுதொடர்பான விவரங்களை விசாரணை அதிகாரிகளிடம் ஷோபி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் பாலபாஸ்கர் உயிரிழந்தபோதே, அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. இந்நிலையில், பாலபாஸ்கருடன் மேலாளராக இருந்தவருக்கு தங்கக்  கடத்தல் கும்பலுடன் தொடர்ப்பு இருந்துள்ளது. இந்த தகவலை அறிந்த பாலபாஸ்கர் மேலாளரை பணியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து பாலபாஸ்கர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. தற்போது அந்த சந்தேகங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் பாலபாஸ்கர் உயிரிழந்த இடத்தில் சரீத் இருந்தது உறுதியாகி இருப்பதால் இசையமைப்பாளர் மரணம் கொலையாக இருக்கலாம்? என அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர். மேலும், வளைகுடா நாடுகளிலிருந்து தங்கம் கடத்த திரைத்துறை பிரபலங்களிடம் மேலாளர் உதவியாளராக இருக்கும் பலரையும் தங்க கடத்தல் கும்பல் பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவும் பல்வேறு கோணங்களில் விசாரணை வளையம் விரிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: