மழையால் சேறும் சகதியுமான தற்காலிக காய்கறி சந்தை அடிப்படை வசதிகள் செய்து தராததால் வையாவூர் சந்தையை திறக்க மாட்டோம்: வியாபாரிகள் அறிவிப்பு

காஞ்சிபுரம்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக காஞ்சிபுரம் ரயில்வே ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த ராஜாஜி காய்கறிச் சந்தை மூடப்பட்டு தற்காலிகமாக காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலை பகுதிக்கு காய்கறிச் சந்தை மாற்றப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக காய்கறிச் சந்தை முழுவதும் மழைநீர் தேங்கி வியாபாரிகள் கடை வைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகளும் மழை நீர் இல்லாத பகுதியில் அருகருகே கடை வைத்து சேறும் சகதியும் உள்ள பகுதியில் வியாபாரம் செய்தனர். இதனால் காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை வாங்க வந்த சிறு வியாபாரிகள் அவதிப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க சமூக இடைவெளி, தனிநபர் இடைவெளி அவசியம் என அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றாமல் சிறுவியாபாரிகள் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். வையாவூர் சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக காய்கறி சந்தையில் அடிக்கடி மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் வியாபாரம் செய்ய முடியவில்லை. இரண்டு மூன்று முறை இதுபோல் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகளாக எங்களுக்கும் நஷ்டம். பொதுமக்களுக்கு காய்கறி பொருள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இனிமேல் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத வையாவூர் காய்கறிசந்தையை திறக்கமாட்டோம் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் நகராட்சியிடம் புகார் தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஏதோ அந்த நேரத்திற்கு மட்டும் வந்து மழை நீர் தேங்கும் இடங்களில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். பின்னர் மீண்டும் மழை வந்தால் வியாபாரம் செய்யும் இடங்களில் மழைநீர் தேங்கி யாருக்கும் பயனில்லாமல் போகிறது. ஆகவே தற்போது இதற்கு சரியான தீர்வாக காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி வளாகத்திலும் அல்லது மாற்று இடத்திலும் பல்வேறு வசதிகளுடன் காய்கறி சந்தை அமைக்க காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே இனியும் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருக்க கூடாது என வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related Stories: