மயிலாடுதுறை தரங்கம்பாடியில் இரட்டைமடி வலை பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 20க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் போராட்டம்!!!

மயிலாடுதுறை:  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இரட்டைமடி வலை பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 20க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள், கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசாணையையும் மீறி சில கிராமங்களில் உள்ள மீனவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், வலைகள் மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின்ககளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவ பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் இன்று வேலையை புறக்கணித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், மீன் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தரங்கம்பாடியில் கடையடைப்புகளும் நடைபெற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் சீர்காழி காவல் துறையினரும், தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா தலைமையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றனர். பின்னர், இந்த பேச்சுவார்த்தையிலும் மீனவர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மீனவர்கள் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சின்னூர், திருமுல்லைவாசல், பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: