3 மாத வீட்டுச்சிறையில் இருந்து விடிவுகாலம் கோவாவுக்கு படையெடுக்கும் விஐபி.க்கள்: தனி விமானங்களுக்கு ரூ.10 லட்சம் வரை செலவு

பனாஜி: கொரோனா நோய் தொற்று ஊரடங்குக்கு பின் கோவாவில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்கள் என தனியார் விமானங்களில் கோவாவில் உள்ள வில்லாக்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். கோவாவில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனி வில்லாக்களுக்கு படையெடுக்கும் தொழிலதிபர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த 3 மாதங்களாக வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் தொழிலதிபர்களும், விஐபிக்களும் கோவா செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் அங்கு வாங்கி வைத்துள்ள வில்லாக்களுக்கு செல்லும் நிலையில் சிலர் அங்குள்ள சொகுசு வில்லாக்களை குத்தகைக்கு எடுக்கின்றனர்.

கடந்த 10 நாட்களாக கோவாவில் 10 தனியார் விமான நிறுவனங்கள் பயணிகளை அழைத்து சென்று வருகின்றன. நாட்டிலேயே கொரோனா நோய் தொற்றின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் இருந்து தான் அதிகம் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் வரை செலவு செய்ய விரும்புபவர்கள், தனியார் விமானங்கள் மூலமாக கோவா செல்லலாம். பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை சுற்றுலாவுக்காக ஏராளமானவர்கள் தேர்ந்தெடுக்கும் சுற்றுலா தலங்களில் கோவா முக்கிய இடம் வகிக்கும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகளில் அனைவரும் முடங்கினார்கள். இந்நிலையில், கோவாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ள்ள சுற்றுலா தளங்களை நோக்கி  வசதி படைத்தவர்கள் தனி விமானத்தில் செல்கின்றனர். இதனால், அங்குள்ள சுற்றுலா மையல்கள், வில்லாக்கள் தொழிலதிபர்களின் குடும்பங்களால் நிரம்ப தொடங்கி இருக்கின்றன.

* இ-பாஸ் கட்டாயமில்லை

சுற்றுலா தளங்களை திறந்துள்ள கோவா அரசு, சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கொரோனா கெடுபிடிகளையும் தளர்த்தி உள்ளது.

* கோவாவுக்கு வருவதற்கு இ-பாஸ் அவசியம் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

* சாலை அல்லது விமான மார்க்கமாக வருபவர்கள்,  ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழை காட்டினால் போதுமானது. அல்லது ரூ.2,000 செலுத்தி கோவாவிலேயே கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.

* எனவே, கெடுபிடிகள் எதுவும் இல்லாமல் இருப்பதோடு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதாலும் கோவா செல்வதில் பலர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

Related Stories: