தனியார் கம்பெனி ஊழியர் கொரோனாவுக்கு பலி சக ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யகோரி கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகை: உத்திரமேரூரில் பரபரப்பு

உத்திரமேரூர்: தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒரு ஊழியர் கொரோனா பாதிப்பால் இறந்தார். இதனால் தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். உத்திரமேரூர் அடுத்த ஒழையூர் கிராமத்தில் தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு 200க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். கடந்த வாரம் இங்கு பணியாற்றி வந்த ஒரு ஊழியர், கொரோனா தொற்று காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மேலும் தொழிற்சாலையில் பணியாற்றும் பலர் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், தொழிற்சாலையில் எவ்வித பாதுகாப்பு, தடுப்பு பணிகள் செய்யாமல் தொடர்ந்து இயங்குவதாக புகார் எழுந்துள்ளது. சக ஊழியர்கள் மற்றும் கிராமத்தினருக்கு கொரோனா பரவுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 19ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பித்து அரசு உத்தரவிட்டது. ஆனாலும், மேற்கண்ட தனியார் தொழிற்சாலையில், அதிகளவில் ஊழியர்களை வைத்து வேலை நடந்து வந்ததாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் ஊழியர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில், நேற்று அரசு உத்தரவுபடி அனைத்து ஊழியர்களுடன் தொழிற்சாலை இயங்கியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தொழிற்சாலை முன்பு திரண்டனர். அங்கு, தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களால், கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசினர். பின்னர், தொழிற்சாலை நிர்வாகிகளிடம் பேசி, தற்காலிகமாக தொழிற்சாலையை மூடும்படியும், தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்த பின், மீண்டும் இயக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: