நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் உணவு கேட்டு போராட்டம்!!!

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்காததால் நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இலகுவாக தொற்றும் நோயாக கொரோனா வைரஸ் அமைந்துள்ளது.

இதனால்தான், கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களைக்கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் மருத்துவ ஊழியர்களே சமூக இடைவெளியுடன் குழிகளில் போட்டு மூடுகின்றனர். இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு தகுந்த நேரத்தில் உணவு அளிக்காமல், போராட்டம் நடத்தும் அளவிற்கு, நாகர்கோவில் மருத்துவமனை, அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால், கொரோனவால் பாதிக்கப்பட்ட 362 பேர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு வெகுநேரமாகியும் உணவு கொடுக்காததால், நோயாளிகள் தட்டுடன் கீழ் தளத்திற்கு வந்து போராட்டம் நடத்தியதோடு, மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலருக்கு வீட்டிலிருந்து சாப்பாடு வரும் என்பதால், உணவு தயார் செய்யவில்லை என மருத்துவமனை ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், அடுத்த சிறிது நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மருத்துவமனை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: