சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவையில் இருந்து சென்னை, நெல்லைக்கு தனியார் ரயில்கள்: விமானம், பேருந்து கட்டண அடிப்படையில் இனி பயணம்

சேலம்: இந்தியாவின் மிகப்பெரிய பொது போக்குவரத்து துறையாக ரயில்வே இருந்து வருகிறது. நாடு முழுவதும் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் போக்குவரத்தாகவும் இது இருக்கிறது. ஏழை, எளிய மக்கள், மிக குறைந்த கட்டணத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயில்களைத்தான் அதிகளவு பயன்படுத்துகின்றனர். இத்தகைய பெருமைகள் கொண்ட ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது,தனியார் ரயில்கள் இயங்க அனுமதியளித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். தனியார் நிறுவனத்திற்கு 35 ஆண்டு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கவுள்ளது.

இதற்கான பணிகளை மத்திய ரயில்வே அமைச்சகம் வேகமாக செய்து வருகிறது. வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனியார் ரயில்கள் இயக்கம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நாடு முழுவதும் தனியார் ரயில்கள் இயங்க 109 வழித்தடங்களை தேர்வு செய்து ரயில்வே அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் 151 தனியார் ரயில்களை இயக்க அனுமதி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு,கேரளாவை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயில் 24 தனியார் ரயில்களை இயக்கும் வகையில் தொகுப்பிடப்பட்டுள்ளது.

இங்கு முக்கிய வழித்தடங்களாக விளங்கும் சென்னை-கோவை, சென்னை-மதுரை, சென்னை-திருச்சி, சென்னை-எர்ணாகுளம், சென்னை-கன்னியாகுமரி, சென்னை-திருநெல்வேலி, கோவை-திருநெல்வேலி, எர்ணாகுளம்-கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்கள் இடம் பெற்றுள்ளது. சேலம் கோட்டத்தில் கோவையில் இருந்து சென்னைக்கும்,திருநெல்வேலிக்கும் தனியார் ரயில்களை இயக்க அனுமதித்துள்ளனர். இரு மார்க்கத்திலும் 4 விரைவு ரயில்கள், தனியார் ரயில்களாக இயங்க இருக்கிறது. இந்த ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இருக்காது. அனைத்தும் முன்பதிவு பெட்டிகளாகவும்,அதுவும் உயர்தர வகுப்புகளாகவும் இருக்கும். பயண கட்டணம் என்பது விமானம், பேருந்து கட்டணத்திற்கு இணையாக நிர்ணயிக்கப்படவுள்ளது. தனியார் ரயில்களுக்கு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால்,தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவெடுத்து, அதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “தனியார் ரயில்கள் இயக்கம் என்பது 5 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதன்மூலம் ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். குறிப்பிட்ட நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு,தனியார் ரயில்கள் இயக்கம் நடைமுறைக்கு வரும்.அதேபோல்,ரயில் இயக்கத்திற்காக பயன்படுத்தப்படும் மின்சாரம்,ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில் பாதை வழித்தட பயன்பாடு ஆகியவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகை ரயில்வே வருவாயை அதிகரிக்கும்,’’ என்றனர்.

* நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ், மெயில், அதிவிரைவு ரயில்கள், பாசஞ்சர் மற்றும் மின்சார ரயில்கள் என 13,100 ரயில்கள் இயக்கப்படுகிறது.

* தினமும் 2.30 கோடி பயணிகள், ரயில்களில் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கின்றனர். தற்போது ஊடரங்கு என்பதால், ரயில்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

* மிகப்பெரிய பொது போக்குவரத்துத்துறையான ரயில்வேயில் மிக அதிகப்பட்சமாக 12.50 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

* ரயில்வேயில் தனியார் மயத்தை புகுத்தி, தனியார் ரயில்களை இயக்குவதன் மூலம் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: