திண்டுக்கல்லில் பெண் மருந்தாளுநருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்!!!

திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் மருந்தாளுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மருந்தாளுநருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களும், வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களும்தான் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே வேலூர் மற்றும் தேனி மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அங்கு தினமும் சென்று பணிபுரிந்து வருபவர்களாலும் கொரோனா பாதிப்புகள், தற்போது திண்டுக்கல்லில் அதிகரித்துள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை 600க்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும், சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 300க்கும் மேலாக அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அங்கு பணியாற்றி வந்த பெண் மருந்தாளுநருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதனால், அங்கு பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Related Stories: