ரூ.350 கோடி வங்கி மோசடி: பஞ்சாப் தொழிலதிபர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

டெல்லி: ரூ.350 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்கு தப்பிவிட்ட பஞ்சாபை சேர்ந்த தொழிலதிபர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட, பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர், மஞ்சித் சிங் மக்னி. இவரது மகன் குல்வீந்தர் சிங் மக்னி, மருமகள் ஜஸ்மீத் கவுர். இவர்கள் அனைவரும் கனரா வங்கி கூட்டமைப்பில் உள்ள வங்கிகளிடம் ரூ.350 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருந்தனர். ஆனால் வாங்கிய கடனை மஞ்சித் சிங் மக்னி குடும்பம் திருப்பிச் செலுத்தவில்லை.

இது தொடர்பாக வங்கிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் மக்னி குடும்பத்தினர் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதற்கிடையே 2018ல் மக்னி வட அமெரிக்க நாடான கனடாவுக்கு தப்பி சென்றுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் புகார் செய்தன. இது பற்றி சி.பி.ஐ-யிடம் உடனடியாக புகார் செய்யுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. ஆனால் வங்கிகள் கடந்த மாதம் தான் சி.பி.ஐ-யிடம் இந்த மோசடி பற்றி புகார் செய்தன. இதையடுத்து தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: