சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் முதல்வரிடம் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

சென்னை: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு போலீசார்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. பிரச்னை பூதாகரமாக வெடித்ததை அடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இதுவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த அடுத்த நாளே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்தார். அதில் பென்னிக்ஸ் மூச்சுத் திணறிதான் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல் நலமில்லாமல் இறந்தார் என்றும் கூறியிருந்தார். முதல்வரின் அந்த அறிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தாக்குதலில் இறந்தவர்களை எப்படி முதல்வர் எடப்பாடி இப்படி கூறலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில்தான் உள்துறை பொறுப்பு உள்ளது. அதன் கீழ் தான் சிபிசிஐடி இயங்கி வருகிறது. அதனால், சாத்தான்குளம் வழக்கு விசாரணை முடியும் வரை, உள்துறை பொறுப்பில் அவர் இருக்கக்கூடாது. அவரிடம் இருந்து உள்துறை பொறுப்பு திருப்பி வாங்கப்பட வேண்டும். தந்தை, மகன் கொலை விவகாரத்தில் முதல்வர், அவர்கள் இயற்கை மரணம்தான் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. அதனால் இந்த விவகாரத்தில் இயற்கை மரணம் என்று தெரிவித்திருப்பது, குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கமாக உள்ளது. அதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதல்வரிடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Related Stories: