திருவள்ளூர் தாசில்தாரை சந்திக்க மூட்டை முடிச்சுகளுடன் வந்த 75 வட மாநில தொழிலாளர்கள்: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, தாசில்தாரை சந்திக்க வடமாநில தொழிலாளர்கள் 75 பேர் மூட்டை முடிச்சுகளுடன் நடந்து வந்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். கொரோனா வைரஸ் தாக்குதலால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த, புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணிபுரியும், ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த, 75 தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு செல்ல, தமிழக அரசு ரயில் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக கேள்விப்பட்டு, திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரியை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கைகளை கூற வேண்டுமென்று புன்னப்பாக்கம் கிராமத்தில் இருந்து திருவள்ளூருக்கு, செங்குன்றம் நெடுஞ்சாலையில் குழந்தைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் சாலையில் நடந்து வந்தனர். திருவள்ளூர் தாலுகா அலுவலகம் வந்த அவர்கள், தங்களை ஒடிசா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களை வேலைக்கு அழைத்து வந்த சேம்பர் உரிமையாளரை அழைத்து வந்து பேசினர். முடிவில் தனி பஸ்சில் அவர்களை, நாளை ஒடிசா மாநிலம் அழைத்து செல்வதாக சேம்பர் உரிமையாளர் கூறியதை தொடர்ந்து, திருமண மண்டபம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: