மேலும் 2 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கொரோனா திருப்போரூர் ஒன்றிய அலுவலகம் மூடல்: சக அலுவலர்கள், ஊழியர்கள் பீதி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில், மேலும் 2 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால், மற்ற அலுவலர்களும், ஊழியர்களும் பீதியில் உள்ளனர். ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. திருப்போரூரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 5 மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில், ஒருவருக்கு கடந்த 26ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருடன் பணிபுரிந்த சக அலுவலகர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நடக்கிறது. இதையொட்டி, அலுவலகத்தில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, மற்றொரு துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னை கிண்டியில் வசிக்கிறார்.

அதேபோல் அரக்கோணத்தை சேர்ந்த ஒருவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (திட்டம்) வேலை செய்கிறார். அவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதையடுத்து, ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

திருப்போரூர் அலுவலகத்தில் பணிபுரியும் பலரும் சென்னை புனித தோமையார் மலை ஒன்றியத்தில், கொரோனா தடுப்பு பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் தற்போது இரண்டு உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. 2 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியான தகவல் வெளியானதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 10 ஊராட்சி செயலர்கள், சக அலுவலர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செய்யூர்: சித்தாமூர் ஒன்றியத்தில் சோத்துபாக்கம் பகுதியில் 3 பேர், காவனூர், புத்திரன்கோட்டை, வேலூர், இந்தலூர் ஆகிய கிராமங்களில் தலா ஒருவர் என 7 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், சித்தாமூர் ஒன்றியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று, லத்தூர் ஒன்றியம் பவுஞ்சூரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் கேளம்பாக்கம், பெருந்தண்டலம், நெல்லிக்குப்பம், கண்ணகப்பட்டு, திருப்போருர், பொன்மார், தாழம்பூர் காரணை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் கருங்குழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியை சேர்ந்த 47 வயது ஆசாமி, சூபர்வைசராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 5 நாட்களாக இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவர், பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கட்டார். தொடர்ந்து, அந்த கடையில் வேலை பார்க்கும் 3 விற்பனையாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டாஸ்மாக் சூப்பர்வைசருக்கு கொரோனா உறுதியானதால், அந்தக் கடையில் மது வாங்கிய மதுப்பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். திருக்கழுக்குன்றம் பேருராட்சியில் மேலும் 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது.

Related Stories: