தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: பொதுமக்கள் நிம்மதி

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே 20 ஆடு, 18 நாய், 3 மாடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரத்தில் தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. வனத்தையொட்டி உள்ள இக்கிராமங்களில் இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்று தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை கடித்து கொன்றது. கால்நடைகளை எளிதில் வேட்டையாடிய பழகிய சிறுத்தை, விவசாயப் பகுதியில் பயன்பாடு இல்லாமல் உள்ள குவாரியில் பதுங்கியது. இந்த சிறுத்தை கடந்த 6 மாதத்தில் 20 ஆடுகள், 18 காவல் நாய்கள் மற்றும் 3 மாடுகளை என தாக்கி கொன்றுள்ளது. சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறை கூண்டு வைத்தனர்.

ஆனால், சிறுத்தை கூண்டில் சிக்காமல் அருகில் இருந்த கல்குவாரியில் சென்று பதுங்குவதை வனத்துறை உறுதி செய்தனர். இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தொட்டகாஜனூர் குவாரி அருகே வைக்கப்பட்ட கூண்டில் நேற்று காலை சிறுத்தை சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தை, தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் காயம் ஏற்பட்டது. கடந்த 6 மாதமாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியதை அறிந்த மக்கள் அங்கு குவித்தனர். சிறுத்தையின் உடல்நிலையை கால்நடை மருத்துவர் அசோகன் பரிசோதனை செய்தார். இதைத்தொடர்ந்து, பிடிபட்ட சிறுத்தை கேர்மாளம் வனப்பகுதியில் விடப்பட்டது.

Related Stories: