ஆரணி பேரூராட்சியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய்கள் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மழைநீர் ஆங்காங்கே சாலை ஓரங்களிலும், சாலை பள்ளங்களிலும் தேங்கி நிற்கிறது. அவ்வாறு தேங்கி நிற்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி  நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஆரணி பேரூராட்சி பகுதியில் உள்ள முலிகி தெருவில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் இந்த தெருவை கடந்து செல்ல கடும் அவதிப்படுகின்றனர். மேலும், மல்லியங்குப்பம் பகுதி மக்களும் இந்த வழியாகத்தான் ஆரணிக்கு வந்து அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக சென்று வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட ஆரணி பேரூராட்சி நிர்வாகம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆரணி பேரூராட்சியில் உள்ள முலிகி தெருவில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இந்த தெருவில் வங்கி மற்றும் பெருமாள் கோயில் உள்ளது. வங்கி, கோயிலுக்கு செல்பவர்களும், இந்த வழியாகத்தான் செல்கின்றனர். இதனால், அவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், தற்போது எங்கு பார்த்தாலும் கொரோனா அச்சத்தில் பொதுமக்கள் உள்ளதாலும், டெங்கு காய்ச்சல் பரவும் என்பதாலும்  எந்த இடத்தில் மழைநீரை பார்த்தாலும் அச்சமாக உள்ளது. எனவே, முலிகி தெருவில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: