சேலம் அருகே வாகன தணிக்கையின் போது போலீஸ் மீது தாக்குதல்!: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜுனன் அட்டகாசம்!!!

சேலம்: சேலம் அருகே சுங்கச்சாவடியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜுனனை போலீசார் நிறுத்தி விசாரித்த போது தகராறு ஏற்பட்ட நிலையில் அவர், காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை காலால் உதைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சேலம் அழகாபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் தர்மபுரி தொகுதி எம்.பி-ஆக ஒருமுறையும், தாரமங்கலம் தொகுதியில் எம்.எல்.ஏ - ஆக இரண்டு முறையும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், சேலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் அருகே ஓமலூர் சுங்கச்சாவடியில் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜுனன் வந்த காரை தடுத்தி நிறுத்திய போலீசார், அடையாள அட்டை இருக்கிறதா? என்று ஓட்டுனரிடம் விசாரித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அர்ஜுனன் தகாத வார்த்தைகளால் திட்டியதால் போலீசார் அவரை எச்சரித்தனர்.

இதனால் மேலும் கோபமடைந்த அவர், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷை காலால் எட்டி உதைத்துள்ளார். கடமையை செய்த போலீசாரை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. காலால் எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories: