சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரித்து கொண்டிருக்கிறது: திமுக தலைவர் மு‌.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் விடப்பட்டுள்ள 2000 கோடி பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த டெண்டர் ஊழல் குறித்து, அறப்போர் இயக்கம் அளித்த புகாரினை காணொலிக் காட்சி வாயிலாக விசாரித்த மத்திய அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது. பாரத்நெட் டெண்டர் ஊழல் குறித்து திமுக அளித்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று முடித்து வைத்து விட்டதாக உயர்நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கில் பதிலளித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை; ஊழலே நடக்கவில்லை என்று, உண்மையை மறைக்க விதண்டாவாதம் செய்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்  உதயகுமார் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரோடு சேர்த்து இன்றைக்குக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது கண்டு நடுநிலையாளர்கள் நகைக்கிறார்கள்.

வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள், மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றலாம் என வீண் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.டெண்டரையே மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் ரத்து செய்திருப்பதால் - இதில் ஊழல் இல்லை; முறைகேடு இல்லை, மத்திய அரசு பாரத்நெட் திட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்குத் தடை விதிக்கவில்லை, எதிர்க்கட்சித் தலைவர் இட்டுக்கட்டி பொய்யாக குற்றம்சாட்டுகிறார் என்றெல்லாம் பச்சைப் பொய் சொன்ன தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தற்போது ராஜிநாமா செய்வாரா அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?

 முறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? முகாந்திரம் இல்லை என்று வக்காலத்து வாங்கிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? முதலமைச்சர் உரிய, ஏற்கத் தகுந்த விளக்கத்தைத் தமிழக மக்களுக்கு உடனடியாகத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிபிஐ விசாரணை கேட்போம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் முதலமைச்சர் எதனடிப்படையில் சொன்னார்? தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ₹25 லட்சம் கொடுத்தீர்கள். இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா. காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும் என கூறியுள்ளார்.

Related Stories: