கொரோனா பாதித்த முதியவர் உடலை ஜே.சி.பி-யில் மயானத்திற்கு எடுத்து செல்லும் கொடுமை: ஆந்திராவில் நேர்ந்த அவலம்!!!

ஹைதராபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் சடலத்தை ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழியில் தள்ளி அடக்கம் செய்த நகராட்சி ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலேயே இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்கள் நாட்டில் பரவாமல் இருக்க உலக நாடுகள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் சடலத்தை ஜே.சி.பி கொண்டு உடலை அடக்கம் செய்யும் கொடுமை நிகழ்ந்துள்ளது. அப்பல்சாமி என்ற முதியவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் உடலை கைப்பற்றிய நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் மயானத்திற்கு சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை முறையாக அடக்கம் செய்யாததற்கு ஆந்திராவில் கண்டனம் எழுந்துள்ளது. கடந்த வாரம் கொரோனாவால் இறந்த ஒருவரை டிராக்டரில் கொண்டு சென்ற சம்பவமும் நடைபெற்றது.

Related Stories: