உபி. அரசின் மிரட்டலுக்கு பிரியங்கா பதிலடி: நான் இந்திராவின் பேத்தி முடிந்ததை செய்துகொள்

புதுடெல்லி: அரசு துறைகளின் மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் உபி மாநில அரசுக்கு சவால் விடுக்கும் வகையில், `நான் இந்திரா காந்தியின் பேத்தி; உங்களது அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டேன்’ என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநில அரசு கொரோனா தொற்று விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால்தான், ஆக்ராவில் அதிகளவு கொரோனா மரணங்கள் நடந்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று உபி மாநில அரசு, ஆக்ரா நிர்வாகத்தின் மூலம் அவரை வலியுறுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது நேற்றைய டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் சேவகராக உபி. மக்களுக்கு பணியாற்றுவது என் கடமை. உண்மையை மக்களிடம் கொண்டு செல்வது எனது பொறுப்பு; அரசின் பிரசாரத்தை அல்ல. அரசு துறைகளின் மூலம் எனக்கு மிரட்டல் விடுத்து உபி அரசு அதன் நேரத்தை வீணாக்குகிறது.  அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? எடுத்துக் கொள்ளட்டும். நான் மக்களுக்கு உண்மையை தொடர்ந்து எடுத்து கூறுவேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி; பெயர் அறிவிக்கப்படாத பாஜக செய்தித் தொடர்பாளர் அல்ல.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: