திருவண்ணாமலையில் நாய்கள் கடித்து பரிதாபம்: வனத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் தொடர்ந்து பலியாகும் மான்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று நாய்கள் கடித்து மான்  பலியானது. வனத்துறையின் அலட்சியத்தால் இதுபோன்று நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகிறது. இந்த மான்கள் கோடை காலத்தில் தண்ணீர், உணவு தேடி வெளியே வருகிறது. அதன்படி திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் அருகே வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி அதிகளவு மான்கள் தொடர்ந்து வெளியேறுவதாகவும், அவ்வாறு வெளியேறும் மான்கள் நாய்களிடம் சிக்கி உயிரிழந்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக வெளியே வரும் மான்கள் திரும்பி செல்வதற்கு அங்குள்ள இரும்பு வேலிகள் தடையாக இருப்பதால் மான்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல முடியவில்லை. எனவே, வேலியை அகற்றும்படி வனத்துறையிடம் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வதால் கடந்த சில மாதங்களாக 5க்கும் மேற்பட்ட மான்கள் நாய்களிடம் சிக்கி பலியாகியுள்ளது. இந்நிலையில் பச்சையம்மன் கோயில் அருகே வனப்பகுதியில் இருந்து நேற்று காலை ஒரு கிளை மான் வெளியே வந்தது. அப்போது அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட நாய்கள் மானை துரத்தியது. இதனால் மான் வேலியை நோக்கி ஓடியது.

ஆனால் வேலியை தாண்ட முடியாததால் திடீரென தவித்தபடி நின்றது. அப்போது பின்னால் வந்த நாய்கள் ஒன்று சேர்ந்து மானை கடித்து குதறியது. இதனால் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் மான் துடிதுடித்து இறந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் தகவல் தெரிவித்து 1 மணி நேரத்திற்கு பின்னர் தாமதமாக வனத்துைறயினர் வந்து இறந்த மானை கொண்டு சென்றனர். வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மான்கள் தொடர்ந்து பலியாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: