சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் எதிரொலி; தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு...வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு..!!

நெல்லை; தமிழகம் முழுவதும்  நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதே சாவுக்கு காரணம் என்று குற்றம்சாட்டி சாத்தான்குளத்தில் நேற்றுமுன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் வியாபாரிகளும் உறவினர்களும் ஈடுபட்டனர். 2 எஸ்ஐக்கள் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படுவர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 போலீசாரும் கூண்டோடு பணிமாற்றம் செய்யப்படுவர் என கலெக்டர் உறுதி அளித்ததையடுத்து 7 மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, அடித்துக் கொன்ற போலீசார் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நீதித்துறை மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மேலும், ஒரு நாள் கடையடைப்பு என்பது அடையாள கடையடைப்பு மட்டுமே. 30-ம் தேதி அனைத்து காவலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடைபெறும் என்றும் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே, காவல்துறையினர் வணிகர்களிடம் அத்துமீறி வருகின்றனர்.

Related Stories: