பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீரமரணம் : ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை 5 வீரர்கள் உயிரிழப்பு!!

ஸ்ரீநகர் : காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தமானது அமலில் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை ஜம்மு காஷ்மீரின் புஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் பல்வேறு செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் குண்டுகள் மூலம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்திய ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேராவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியா தரப்பில் ஹவில்தார் தீபக் கார்கி என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இதன்மூலம் இந்த மாதத்தில் இதுவரை 5 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 1400க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த ஆண்டு 3168 முறையும், 2018ல் 1629 முறையும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: