தேர்ச்சி பெற்றும் பயிற்சிக்கு அழைப்பில்லை சிறைத்துறை, தீயணைப்புத்துறைக்கு தேர்வு பெற்றவர்கள் விரக்தி

வேலூர்: தமிழக அரசின் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றும், பயிற்சிக்கான அழைப்பு கடிதம் வராமல் 411 பேர் விரக்தியின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 2ம் நிலை பெண் ஆயுதப்படை காவலர்கள் 2,465 பேர், 2ம் நிலை ஆண் காவலர்கள் 5,962 பேர், 2ம் நிலை ஆண் சிறைக்காவலர்கள் 186 பேர், 2ம் நிலை பெண் சிறைக்காவலர்கள் 22 பேர் என 2ம் நிலை சிறைக்காவலர்கள் 208 பேர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில் தீயணைப்பு வீரர் 191 காலி பணியிடங்கள், மேற்கண்ட அனைத்து நிலையிலும் 62 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 8,888 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. உடற்தகுதி தேர்வு நவம்பர் 18, உடற்திறன் தேர்வு நவம்பர் 23 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அதே நவம்பர் மாதம் 26ம் தேதி நடந்தது.

இப்பணிகள் முடிந்து தேர்ச்சி பெற்றோர் விவரம் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியானது. தொடர்ந்து மார்ச் 19ம் தேதி மருத்துவ பரிசோதனைகள் நடந்து முடிந்த நிலையில் தமிழ்நாடு சிறப்புக்காவல்படை, ஆயுதப்படையில் 2ம் நிலை காவலர்களுக்கு தேர்வானவர்களுக்கு மட்டும் பயிற்சிக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு அனைவரும் அந்தந்த மாவட்ட போலீஸ் பயிற்சி பள்ளிகளில் 7 மாத கால பயிற்சி தொடங்கி நடந்து வருகிறது.  220 சிறைக்காவலர்களுக்கும், தீயணைப்புத்துறையில் தேர்வான 191 பேருக்கும் பயிற்சிக்கான அழைப்புக்கடிதம் இதுவரை வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 2ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புப்படை வீரர் பணியிடங்களுக்கு தேர்வான 411 பேர் விரக்தியின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சிறைக்காவலர் பணியிடத்துக்கு தேர்வானவர்கள் கூறும்போது, ‘சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு இன்னும் பயிற்சிக்கான அழைப்பு கடிதம் வரவில்லை. சிறைக்காவலர்களுக்கு 6 பயிற்சியும், தீயணைப்பு வீரர்களுக்கு 4 மாத பயிற்சியும் வழங்கப்படும். இதில் ஒரு மாத காலம் நேரடி பயிற்சி காலமாகும். கொரோனா ஊரடங்கு என்ற காரணத்தால் எங்களுக்கு மட்டும் இன்னும் வாய்ப்பளிக்காமல் இருப்பது வேதனையை தருகிறது. விரைவில் எங்களுக்கான பயிற்சிக்கு அழைப்புக்கடிதம் அனுப்ப காவல்துறை இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: