புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 50,000 கோடியில் வேலைவாய்ப்பு: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘திரும்பி வந்த திறமைசாலிகளால் இனி கிராமங்களின் வளர்ச்சி வேகமெடுக்கும்,’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா தேசிய ஊரடங்கால் வேலை இழந்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், ‘கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ரூ.50,000 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பீகாரின் கதிஹர் மாவட்டத்தின் தேலிகர் கிராமத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கி வைத்து மோடி பேசியதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் கிராமங்களின் செயல்பாட்டை நான் மிகவும் பாராட்டுகிறேன். இந்த விஷயத்தில் கிராமங்கள் நகரங்களுக்கு மிகப்பெரிய பாடத்தை புகட்டி உள்ளன. ஊரடங்கால் திறமைசாலிகள் நகரத்தில் இருந்து மீண்டும் சொந்த ஊர்களுக்கே திரும்பி விட்டனர். நகரங்களின் அசுர வளர்ச்சிக்கு பின்னால் உள்ள திறமைகளும், உழைப்புமான புலம்பெயர் தொழிலாளர்கள், இனி இத்திட்டத்தின் மூலமாக கிராமங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த உள்ளனர்.

ஊரடங்கு சமயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் நலனில் மத்திய அரசு எப்போதும் அக்கறை கொண்டிருந்தது. அந்த தொழிலாளர்கள் அவர்களின் வீட்டின் அருகே வேலைவாய்ப்பை பெற வேண்டும், கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இத்திட்டத்தை நீடித்த கிராமப்புற கட்டமைப்பில் கவனம் செலுத்துவதோடு, இன்டர்நெட் போன்ற நவீன வசதிகள் கிராமத்தில் வழங்கபடுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

6 மாநிலங்களில் அமலாகிறது

இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிராமப்புற பொதுப் பணி திட்டத்தின் கீழ் 125 நாட்கள் வேலை வழங்கப்படும். முதற்கட்டமாக அதிகளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வந்த பீகார், உபி, மபி, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில், 125 நாட்களுக்கு 25 வகையான வேலைகள் வழங்கப்படும்.

Related Stories: