சீனா ஒரு போக்கிரி: அமெரிக்கா ஆவேசம்

வாஷிங்டன்:  இந்தியாவுடன் எல்லைப் பதற்றத்தை சீனா அதிகரிப்பதாகவும், முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார். டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடந்த மாநாட்டில் இணைய தளம் மூலமாக வாஷிங்டனில் இருந்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் நேற்று முன்தினம் உரையாற்றினார். அவர் பேசியதாவது: சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியானது, நேட்டோ போன்ற அமைப்புக்கள் மூலமாக செய்யப்படும் சுதந்திர உலகிற்கான அனைத்து முன்னேற்றங்களையும், நற்செயல்களையும் சீர்குலைக்கிறது. தனக்கு ஏற்ற புதிய விதிமுறைகளை உருவாக்க முயற்சிக்கிறது. சீன ராணுவம், உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடன் எல்லை பதற்றங்களை அதிகரிக்கிறது.

அது, தென் சீன கடலை ராணுவ மயமாக்க முயற்சிக்கிறது. சட்ட விரோதமாக அங்கு அதிக நிலப்பகுதியை கேட்கிறது. அனைத்து வளங்களும் நிறைந்த தென் சீன கடல் பகுதிக்கு சீனா உரிமை கோருகிறது. மேலும், கிழக்கு சீன கடலில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவிலும் உரிமை கோரியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியானது, அதன் அண்டை நாட்டுக்கு மோசமான போக்கிரி மட்டுமல்ல; கொரோனா வைரஸ் குறித்த உண்மையை உலகுக்கு கூறாமல், அது உலகம் முழுவதும் பரவுவதற்கு காரணமானது கூட. அதன் செயலால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். உலக பொருளாதாரமும் சீர்குலைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: