கொரோனா நோயாளி அருகே சடலம்: வீடியோ வெளியிட்ட டாக்டரை இனியும் துன்புறுத்த கூடாது: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளியின் அருகே உள்ளே படுக்கையில், கொரோனா பாதித்து இறந்தவரின் சடலம் வைக்கப்பட்டிருந்ததை அங்கு வேலை பார்த்து வந்த மருத்துவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்த டெல்லி மாநில அரசு, அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்தது.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள், இறந்த பிறகு அவர்களது சடலங்கள் எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது.

அப்போது, நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, `வைரசால் இறந்தவர்களின் சடலங்களை கையாளும் விதத்தை பற்றி வீடியோ வெளியிட்ட மருத்துவரை தற்காலிக பணிநீக்கம் செய்த அரசு, அவர் மீது எப்ஐஆரும் பதிவு செய்துள்ளது. அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்தது ஏன்? அவரை துன்புறுத்துவதை அரசு இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். கொரோனா நோயாளிகளை கவனிப்பதிலும், சடலங்களை கையாளுவதிலும் கடந்த காலங்களில் பின்பற்றி நடைமுறையை பின்பற்ற வேண்டும்,’ என்று எச்சரித்தது.

அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், சடலங்கள் கையாளப்படும் விதம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டும் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

Related Stories: