யுஎஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ ஒப்புதல்!

வாஷிங்டன்: யுஎஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ ஒப்புதல் அளித்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் எந்த தொழில்முறை சர்வதேச டென்னிஸ் போட்டிகளும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை உரிய பாதுகாப்புகளுடன் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

அதே நேரம் இந்த தருணத்தில் கிராண்ஸ்லான் போட்டிகளில் பங்கேற்பது குறித்து உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களான ஜோகோவிச் மற்றும் ரபேல் நடால் உள்ளிட்டவர்களிடம் தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவால் விம்பிள்டன் போட்டிகள் ரத்தான நிலையில் பிரென்ச் ஓப்பன் போட்டிகள் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம், இது காலி அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் போட்டி என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவை அமெரிக்காவின் டென்னிஸ் சம்மேளனம் இந்த வார இறுதியில் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தான் இந்த தொடர் நடத்தப்படும் என்றும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெருமளவு பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: