கொரோனா பாதிப்பு பற்றி ஐசிஎம்ஆர் சொல்வது பொய்; இந்தியாவில் சமூக பரவல் எப்போதோ வந்து விட்டது: நிபுணர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘இந்தியாவில் எப்போதோ கொரோனா சமூக பரவல் ஏற்பட்டு விட்டது. இதை மறைத்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொய்யான தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது,’ என நிபுணர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் பால்ராம் பராக்வா, சுகாதார அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகளுடன் கடந்த வியாழனன்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘நாட்டில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைவாகதான் உள்ளது. இன்னும் அது சமூக பரவல் கட்டத்துக்கு செல்லவில்லை,’ என்றார்.

இதற்கு ஆதாரமாக, ‘செரோ’ ஆய்வு  குறித்த ஆதாரங்களையும் வெளியிட்டார். ஆனால், ‘இந்த செரோ ஆய்வு அறிக்கையானது தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த உண்மை தன்மையை பிரதிபலிக்கவில்லை,’ என நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து 65 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட முதல்கட்ட  செரோ ஆய்வில், ‘26,400 பேரில் 0.73 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்,’ என கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் சமூக பரவல் எப்போதோ வந்து விட்டது என்று பல்வேறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இது பற்றி பல்வேறு நிபுணர்கள் கூறியுள்ள கருத்து வருமாறு: எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் மிஸ்ரா: நாட்டின் பல்வேறு பகுதிகளில்  கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலையில் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நோய் இல்லாத பகுதிகளிலும் நோய் தாக்கம் ஏற்பட்டு விட்டது. அரசு இதை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இதேபோல், பிரபல வைரஸ் நிபுணர் ஷாகித் ஜமீல் கூறுயைில், “இந்தியா எப்போதோ சமூக பரவல் நிலையை எட்டி விட்டது,” என்றார்.

நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் அரவிந்த் குமார்: ஐசிஎம்ஆரின் அறிக்கையை ஏற்றுக் கொண்டாலும், டெல்லி, அகமதாபாத், மும்பை போன்ற நகரங்களில் சமூக பரவல் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. நிதி ஆயோக் உறுப்பினர் விகே.பால்: இந்த ஆய்வு அறிக்கை, ஏப்ரல் மாத நிலவரத்தை சுட்டிக் காட்டுவதாக உள்ளது. செரோ ஆய்வு மே 3வது வாரத்தில் நடத்தப்பட்டது. நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு உருவாக 15 நாட்களாகும், எனவே, இந்த சோதனை நடத்தப்பட்ட போது பலருக்கு ஆரம்ப நிலையில் கூட தொற்று இருந்து இருக்கலாம்.

பரிதாபாத் தனியார் மருத்துவமனை நுரையீரல் துறை தலைவர் ரவி ஷேகர் ஜா: நாட்டில் கண்டிப்பாக கொரோனா நோய் தொற்று சமூக பரவல் உருவாகி இருப்பதை நான் உணர்கிறேன். கடந்த 10 நாட்களாக அரசுகள் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதை நிறுத்தியுள்ளது. சமூக பரவல் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், ஏற்றுக் கொள்வதற்கு மறுக்கிறார்கள்.

செரோ சோதனை என்றால் என்ன?

சாதாரண மக்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியான ‘IgG’ (இம்முனோகுளோபிலின் ஜி) ஆன்டிபாடிகள் சதவீதம் குறித்து பரிசோதிக்கப்படுகிறது. இதில், ஒரு நபர் ‘IgG நேர்மறை’ என்று கண்டறியப்பட்டால், அவர் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று அர்த்தம். ரத்த பிளாஸ்மாவால் உருவாக்கப்படும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி திரவமானது. ரத்தத்தில் 75 சதவீதம் வரை கலந்திருக்கும். இந்த சோதனையின் மூலம்தான் நாட்டில் சமூக பரவல் ஏற்பட்டதா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க முடியும் என ஐசிஎம்ஆர் கூறி வருகிறது.

Related Stories: