ஊர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள், தொடர் மழை செங்கல் சூளை தொழில் மீண்டும் முடங்கியது: உரிமையாளர்கள், பணியாளர்கள் பாதிப்பு

ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரிந்து வந்த வட மாநில  தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதாலும், தென் மேற்கு பருவ மழை பெய்து  வருவதாலும் செங்கல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில்  ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பக ராமன்புதூர்  மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள்  உள்ளன.  இதில் உள்ளூர் மற்றும் வட மாநிலங்களை  சேர்ந்த பல்லாயிரக்கணக்கான  தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு  வருகிறார்கள். இந்நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக கடந்த 2  மாதங்களுக்கு மேலாக வேலை நடக்காமல் செங்கல் சூளை தொழிலாளர்கள்  வாழ்வாதாரத்தை இழந்தனர். தற்பொழுது ஊரடங்கு தளர்வு காரணமாக  மீண்டும் செங்கல் சூளைகள்  செயல்பட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில்  வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் தங்களின் சொந்த ஊருக்கு சென்று  வருகின்றனர். கடந்த வாரத்தில் தோவாளை தாலுகாவில் இருந்து 3 அரசு  பேருந்து மூலம் சுமார் 117 வடமாநில செங்கல் சூளை தொழிலாளர்கள்  கன்னியாகுமரிக்கு சென்று அங்கிருந்து மேற்கு வங்கம் சென்ற ரயிலில் புறப்பட்டு சென்றனர். இதனால் செங்கல்  சூளை உரிமையாளர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில்  தென்மேற்கு பருவ மழையும் தீவிரம் அடைந்துள்ளதால் ஆரல்வாய்மொழி, தோவாளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகள் மீண்டும் செயல்பட முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.

இதனால்  கடந்த ஒரு வாரமாக செங்கல் சூளைகளில் புதிதாக  அறுத்து வைத்த செங்கல்கள் அனைத்தும் மழையில் கரைந்து விட்டதால் ஒரு  சூளைக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன்  உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இத்  தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் மீண்டும்  வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.   இந்த இழப்பை ஈடுகட்ட தமிழக அரசு  பாதிக்கப்பட்ட செங்கல்சூளை உரிமையாளர்களுக்கும், ஏழை தொழிலாளர்களுக்கும்   நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோன்று மீண்டும் தொழில் செய்ய வங்கிகள் மூலமாக  கடன் உதவி செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும் என செங்கல் சூளை  உரிமையாளர்களும்  தொழிலாளர்களும்  தமிழக அரசுக்கு  கோரிக்கை வைத்துள்ளனர்.

உற்பத்தி குறைவு

 செங்கல் சூளைகளில் 3 கட்டமாக பணிகள் நடக்கின்றன. இதில் வடமாநில தொழிலாளர்கள் மண்ணில் இருந்து பச்சை செங்கலை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபடுவது வழக்கம். தற்போது அவர்கள் சொந்த ஊர் திரும்பி விட்டதால், பச்சை செங்கல் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் அடுத்த கட்டமாக சூளையில் கல்  அடுக்குபவர்கள், சுடும் பணியில் ஈடுபடுபவர்கள், விற்பனைக்கு எடுத்துச்செல்லும் டிரைவர்கள்  என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல் தேவை குறைந்தது

ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே தான் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதனால் தேவை மிகவும் குறைவு என்பதால் செங்கல் விலை உயரவில்லை. மேலும் மழை காரணமாக மூலப்பொருளான மண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விறகு விலையும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதிக செலவு செய்து மூலப்பொருட்களை பயன்படுத்தி செங்கல் உற்பத்தி செய்தாலும் நஷ்டத்தில் தான் விற்பனை செய்ய வேண்டியுள்ளது என உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: