நாகை அருகே பருத்தி வயலில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் அழிப்பு: அச்சப்பட வேண்டாம் என வேளாண் அதிகாரி தகவல்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே பருத்தி வயலில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டது. இது உள்ளூர் வெட்டுக்கிளிதான் எனவே விசாயிகள் அச்சப்பட வேண்டாம் என வேளாண் அதிகாரி தெரிவித்தார். நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்காளச்சேரி ஊராட்சியில் உள்ள பாலூர் கிராமத்தில் 70 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து உள்ளனர். நேற்று முன்தினம் திடீரென 1000கணக்கான வெட்டுக்கிளிகள் பருத்தி வயலில் புகுந்து பருத்தி இலைகளை துண்டித்து சேதப்படுத்தின. இதை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வேளாண் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உதவி வேளாண் அலுவலர் உமா மற்றும் அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பருத்திகளை பார்வையிட்டு வேம்பு சேர்ந்த மருந்தை வயலின் வரப்புகளில் அடித்தனர்.

நேற்று காலையில் அந்த வயலில் வெட்டுக்கிளிகள் மயங்கி கிடந்தன. நேற்றும் 70 ஏக்கர் நிலத்தில் மருந்து அளிக்கப்பட்டது. மருந்து அடித்தவுடன் வெட்டுக்கிளிகள் அங்கிருந்து பறந்துவிட்டன. நேற்று குறைந்த அளவிலேயே வெட்டுக்கிளிகள் தென்பட்டன. பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களை மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கம் பார்வையிட்டார். அவருடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன், ஒன்றியகுழு தலைவர் நந்தினிதர், பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் மற்றும் சென்னையிலிருந்து வேளாண் கூடுதல் இயக்குனர் சுப்பையன், நாகை வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர் செடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன் பின் கூடுதல் இயக்குனர் சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது, இந்த வெட்டுக்கிளிகள் வட இந்தியாவில் பரவி வரும் வெட்டுக்கிளிகள் அல்ல. இவைகள் சாதாரண உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான். இந்த வெட்டுக்கிளிகள் குறித்து விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை. வேம்பு சார்ந்த மருந்து அடித்தாலே இந்த வெட்டுக்கிளிகளை அழித்துவிடலாம். இந்த வயலில் வேம்பு சார்ந்த மருந்து அடிக்கப்பட்டவுடன் மயங்கிய நிலையில் அந்த இடத்திலிருந்து பறந்து சென்று இறந்துவிடும். இந்த வெட்டுக்கிளிகள் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று கூறினார்.

Related Stories: