ராஜஸ்தான் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு; குதிரை பேரம் நடத்துவதற்காக தேர்தலை தள்ளிவைத்தது பாஜ

ஜெய்ப்பூர்: ‘குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏ.க்களை வாங்குவதற்காகவே மாநிலங்களவை தேர்தலை 2 மாதம் ஒத்திவைத்தது பாஜ,’ என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார். கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி, குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த பாஜ, அடுத்ததாக ராஜஸ்தானை குறி வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ.க்கள் ரிசார்ட்ஸ் ஒன்றில் மொத்தமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், கட்சி எம்எல்ஏ.க்களை ரிசார்ட்டில் சந்தித்த பின் அளித்த பேட்டியில், ‘‘மாநிலங்களவை தேர்தலை 2 மாதத்திற்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும். ஆனால், குஜராத்திலும், ராஜஸ்தானிலும் விலைக்கு வாங்கும், விற்கும் பேரம் முடியாததால் அதை ஒத்தி வைத்தனர்.

இப்போதும் அந்த பேரம் முடியவில்லை. இன்னும் எத்தனை நாள்தான் குதிரை பேரம் நடத்தியே அரசியல் செய்வீர்கள்? அவர்களுக்கு காங்கிரஸ் சரியான அடி கொடுக்கும் நேரம் வந்து விட்டது. மக்கள் இப்போது எல்லாவற்றையும் புரிந்து கொண்டுள்ளனர். எங்கள் கட்சி எம்எல்ஏ.க்கள் ஒற்றுமையுடன் உள்ளனர்,’’ என்றார். ராஜஸ்தானில் வரும் 19ம் தேதி 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நடக்கிறது. 200 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 107 எம்எல்ஏ.க்களுடன் உள்ள காங்கிரஸ், பகுஜன் சமாஜ் (6 எம்எல்ஏ), 12 சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. பாஜ 72 எம்எல்ஏ.க்களை கொண்டுள்ளது.

சட்டப்பேரவையில் கட்சியின் பலத்தை பொறுத்து, காங்கிரஸ் 2 சீட்களில் வெல்ல முடியும். பாஜ.வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் மட்டுமே கிடைக்கும். ஆனால், பாஜ 2 வேட்பாளர்களை களமிறக்கி, எப்படியும் 2 இடத்தை பிடிக்க முயற்சிக்கிறது. இதற்கு, 12 சுயேச்சைகள் ஆதரவு கிடைத்தால் சாத்தியமாகும் வாய்ப்புள்ளதால், பாஜ-காங்கிரஸ் இடையே மோதல் வலுத்துள்ளது.

Related Stories: