ஆந்திராவில் சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், டெய்லர்களுக்கு தலா ரூ.10000 நிதியுதவி - முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

அமராவதி: ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்களுக்கு தலா 10000 ரூபாய் வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

இதனால் பல்வேறு சிறு,குறு தொழில்கள் முடங்கின. குறிப்பாக சாமானிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே அவர்களுக்கு அரசுகள் சார்பில் நிவாரண உதவிகள் மற்றும் தொழிலை மீட்டெடுக்க கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என மொத்தம் ரூ.2.47 லட்சம் பேருக்கு தலா 10000 ரூபாய் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக ஆந்திர அரசு சுமார் ரூ.247 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்மூலம் 82,347 சலவை தொழிலாளர்கள், 38,767 சலூன் கடைக்காரர்கள், 1,25,926 தையல்காரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை துவக்கி வைத்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஒரு வருடத்தில் ரூ.3.58 கோடி மக்களுக்கு ரூ.42,465 கோடி நிதியுதவியை தனது அரசு வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

Related Stories: