தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.140 கோடி மோசடி: உரிமையாளர், பள்ளி ஆசிரியர் கைது

சாயல்குடி: தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.140 கோடி வரை மோசடி செய்துள்ளதாக, உரிமையாளர் மற்றும் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம், மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் துளசி மணிகண்டன்(36). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளராக பணி புரிந்தபோது, சிக்கல் அருகே தத்தங்குடியில் ஆசிரியராக பணியாற்றும் ஆனந்துடன் பழக்கம் ஏற்பட்டது. ஆசிரியர் ஆனந்த், தான் சென்னையை  சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் நீதிமணியுடன் சேர்ந்து,  நிதி  நிறுவனம்  நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு  செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும் ராமநாதபுரத்தில் ஆனந்த், நிதி நிறுவன அலுவலகத்தையும் நடத்தி வந்துள்ளார். இதை நம்பிய துளசி மணிகண்டன், தனது மனைவி ஐஸ்வர்யா பெயரில் கடந்த 2018ல் ரூ.12 லட்சம் முதலீடு  செய்துள்ளார். அதன் பிறகு நண்பர்கள், உறவினர்கள் என 58  பேரை ரூ.3 கோடி வரை முதலீடு செய்ய வைத்துள்ளார்.  துவக்கத்தில் லாப தொகை வழங்கிய  நீதிமணி மற்றும் ஆனந்த் ஆகியோர், 2019 அக்டோபர் முதல் நிறுத்தி விட்டதாகக்  கூறப்படுகிறது.

இதனால் ஆசிரியர் ஆனந்திடம்,  துளசி மணிகண்டன் கேட்டபோது மிரட்டியதாக நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ராமநாதபுரம் பஜார்  போலீசார் விசாரணை செய்து, நீதிமணி, அவரது மனைவி மேனகா, ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக வழக்குப்பதிந்து நீதிமணி, ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.50 கோடி வரை முதலீடு செய்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் ரூ.140 கோடி வரை மோசடி நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: