நான் அமெரிக்கா செல்வதற்காக ஓராண்டு சம்பள பணத்தை விமான கட்டணத்துக்கு செலவிட்டார் தந்தை: சிறு வயது கஷ்டம் பற்றி சுந்தர் பிச்சை உருக்கம்

புதுடெல்லி: “எனது தந்தை நான் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்டுக்காக தனது ஓராண்டுக்கு சம்பளத்துக்கு ஈடான தொகையை  செலவழித்தார்,” என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஒன்றான, ‘யூ டியூப்’,  ‘டியர் கிளாஸ் ஆப் 2020’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் பங்கேற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக இந்தியாவில் இருந்து சென்றபோது எதிர்கொண்ட சவால்களை நினைவு கூர்ந்தார்.  

அவர் தனது வீட்டில் இருந்து காணொளி காட்சி மூலமாக பேசியதாவது, நான் இந்தியாவில் இருந்து சென்று, அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக திட்டமிட்டேன். அதற்கான விமான டிக்கெட்டுக்காக எனது தந்தை தனது ஓராண்ண்டு சம்பளத்துக்கு நிகரான தொகையை செலவிட்டார். அதுதான் எனது முதல் விமான பயணம். அமெரிக்காவில் வசிப்பது என்பது மிகவும் செலவு மிகுந்தது.

வீட்டிற்கு போன் செய்ய வேண்டுமானால் நிமிடத்திற்கு 2 அமெரிக்க டாலர்கள் செலவாகும். நான் அமெரிக்காவில் இருந்து திரும்புவதற்கும் இந்தியாவில் எனது தந்தை பெறும் ஓராண்டு சம்பளத்துக்கு ஈடான தொகை செலவிடப்பட்டது. இன்றைய  குழந்தைகள் அனைத்து வகை மற்றும் வடிவிலான கம்யூட்டர்களையும் கையாளுகின்றனர். ஆனால், எந்த தொழில்நுட்பமும் இல்லாத சூழலில் நான் வளர்ந்தேன். எனது பத்து வயது வரை கூட நான் தொலைபேசியை பார்த்தது கிடையாது. நான் அமெரிக்காவிற்கு பட்டப்படிப்பு படிப்பதற்கு வருவதற்கு முன்பு வரை கம்ப்யூட்டரையும், டிவி.யையும் கூட எளிதில் அணுக முடியாது. நான் வளரும்போது தொலைக்காட்சியில் ஒரே ஒரு சேனல் மட்டுமே இருந்தது. வெளிப்படையாக இருங்கள். பொறுமையாக இருங்கள். பொறுமை மற்றும் நம்பிக்கையோடு இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: