துணை முதல்வர் சிசோடியா பகீர் எச்சரிக்கை டெல்லியில் ஜூலை இறுதிக்குள் 5.50 லட்சம் பேருக்கு கொரோனா: கெஜ்ரிவாலுக்கு கொரோனா இல்லை

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அதேபோல் பலி எண்ணிக்கை 900ஐ எட்டிவிட்டது. இதனால் அரியானா, உத்தரப் பிரதேச எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டன. மீண்டும் நேற்று முன்தினம் எல்லைகளை திறக்க முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சிகிச்சை இல்லை என்றும், டெல்லி மக்களுக்கு மட்டுமே டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த உத்தரவை ஆளுநர் அனில் பைஜால் நேற்று முன்தினம் ரத்து செய்ததோடு, டெல்லியில் யார் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம் என உத்தரவிட்டார். இந்நிலையில் பேரிடராக கொரோனா அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சுகாதார அமைச்சர் ஜெயின் உள்பட முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்குப் பின் பேட்டி அளித்து சிசோடியா, ‘‘டெல்லியில் சமுதாய தொற்று என்னும் அபாயக் கட்டம் இதுவரை ஏற்படவில்லை. அதே சமயம் அதிகரிக்கும் தொற்று அச்சம் உண்டாக்குவதையும் மறுக்க முடியாது. ஜுலை இறுதிக்குள் 5.50 லட்சமாக உருவெடுக்கும் எனவும் கணிப்பு எழுந்துள்ளது. இதனால் டெல்லியில் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கைகள் தேவை. இதனால் டெல்லியில் அனைவருக்கும் சிகிச்சை என்ற பிடிவாதத்தை கவர்னர் மாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

கெஜ்ரிவாலுக்கு கொரோனா இல்லை

முதல்வர் கெஜ்ரிவால் கடந்த ஞாயிறன்று தொண்டை வறட்சி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது 51 வயதாகும் அவர், சிறுவர்களையும், பெரியவர்களை குறிவைத்து தாக்கும் கொரோனா பாதிப்பு கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தானாகவே கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு நேற்று சென்றார். ஆனால், பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

Related Stories: