பழிக்குப்பழியாக கூலிப்படை ஏவி பயங்கரம் மதுரை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளி கொடூரக்கொலை: டாக்டர்கள், செவிலியர்கள் ஓட்டம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனைக்குள் அதிகாலையில் புகுந்த கூலிப்படை கும்பல், அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினர். இதைக்கண்டு டாக்டர்கள், செவிலியர்கள் அலறி ஓடினர்.  மதுரை, கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). மனைவி நாகலட்சுமி. 2 குழந்தைகள் உள்ளனர். நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல், அரசு மருத்துவமனை காவலாளியை மிரட்டி விட்டு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தனர். அங்கு படுக்கையில் படுத்திருந்த முருகனை, அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தியது. அவரது அலறல் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தலை, கழுத்து மற்றும் மார்பில் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்ததில், முருகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதை பார்த்த பின்னர் கும்பல் தப்பிச் சென்றது.தகவலறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்தினர். போலீசார் கூறும்போது, ‘‘கரும்பாலை பகுதியை சேர்ந்த பட்டா ராஜசேகர் என்பவரை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த சந்துரு, முருகன் உட்பட 8 பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இதில் கைதான 8 பேரும் சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்துள்ளனர். இந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே தற்போது முருகன், கூலிப்படையினர் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். முருகனை முதல் நாளே சிலர் நோட்டமிட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது’’ ன்றனர். இதுதொடர்பாக மதுரை கரும்பாலையைச் சேர்ந்த அருண்பாண்டியன், விக்னேஷ்வரன், கரண்ராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.  அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, சிகிச்சையில் இருந்தவரை கூலிப்படையினர் படுகொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஞ்சா விற்பனையில் தொடரும் கொலைகள்

கடந்த வருடம் மதுரை கரும்பாலை பகுதியில் ராஜசேகர் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தார். அவரை கண்காணிப்பு கேமரா வைத்து சந்துரு என்பவர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். கைது செய்யப்பட்ட ராஜசேகர், சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வந்ததும் சந்துருவை கொலை செய்ய அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார். ஆனால் அதில் யாரும் சிக்கவில்லை. இந்த நிலையில், தன்னை கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சந்துரு, முருகன் உட்பட 8 பேர் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்தனர். அதற்கு பழிக்குப்பழியாகவே, ராஜசேகர் குடும்பத்தினர் கூலிப்படையை ஏவி முருகனை கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: