திருவேற்காட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதி

பூந்தமல்லி: திருவேற்காட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.பிரசித்தி பெற்ற கோயில் நகரங்களில் ஒன்றான திருவேற்காடு நகராட்சியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 102 ஆக உள்ளது. இதில், 57 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 13 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 3 பேர் இறந்துள்ளனர்.இந்நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால், அனைத்து கடைகள் முன்பாக பொது இடங்களிலும் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து கடைகளுக்கும் பேனர்கள் அச்சடித்து நகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

கொரோனாவால், அதிகம் பாதிக்கப்பட்ட வார்டுகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுகாதார பணியாளர்கள் அந்த வழியே செல்லும் பொதுமக்களை, உடலின் வெப்பநிலை சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.  உடலில் வெப்ப நிலை அதிகரிப்பு காணப்பட்டால் அவர்களது முகவரி, செல்போன் நம்பர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.திருவேற்காடு நகராட்சியில் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு நகராட்சி அலுவலகம் மூடி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: