97வது பிறந்தநாள் விழா கலைஞரின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: கலைஞரின் 97வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுகவின் முக்கிய தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்களும்  மரியாதை செலுத்தினர்.  கலைஞருக்கு நேற்று 97-வது பிறந்தநாளாகும். கலைஞரின் பிறந்தநாளை, நல்ல உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று, திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் உதவிகள் செய்ய உகந்த நாளாக கொண்டாடுகின்றனர். அதன்படி நேற்று கொரோனா விழிப்புணர்வு பிரசாரம், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்குதல், அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்கள் வழங்குதல், காய்கறிகள் வழங்குதல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்தல்,

அபலைகள், வீடற்றவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளித்தல், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

 சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்கள் ெஜ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் உள்ளிட்டோர் பல்வேறு உதவிகளை செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தலைவர் கலைஞரின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது.  முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு நேற்று காலை சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.   முன்னதாக கலைஞர் நினைவிடத்தில் திமுக தொண்டர் அசோக் குமார்- மகாலட்சுமி திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். தொடர்ந்து அவர்களுக்கு பரிசு வழங்கி மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். கவிஞர் வைரமுத்து கலைஞர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள், தொண்டர்கள் என அனைவரும் காலையில் இருந்து தொடர்ந்து நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, அண்ணா சமாதியும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைவர் கலைஞரின் திருஉருவச்சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செய்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாவட்டச் செயலாளர்கள் கழக குமார், ஜீவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கவிஞர் வைரமுத்துவும், அறிவாலயம் வந்து மரியாதை செலுத்தினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதேபோல, தமிழகம் முழுவதும் மாவட்ட அலுவலகம், ஒன்றிய, கிராமங்களில் உள்ள கிளை அலுவலகங்களில் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: