பீனிக்ஸ் பறவை

நன்றி குங்குமம் முத்தாரம்

நெருப்பில் போட்டாலும் மீண்டும் எழுந்து பறக்கும் ஒரு பறவை. எகிப்தில் சூரியனுக்காக இருக்கும் கோவிலில் அது இன்னமும் வசித்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்த ஒரே ஒரு பறவை இதுதான். தங்க மயமான சிவப்பு நிறத்தில் ஜொலிக்கக் கூடிய இறகுகள் கொண்டது அந்தப் பறவை. அதன் வாலின் பகுதிகளில் பழுப்பும் நீலமும் ஆன வண்ணமயமான இறகுகள் அழகாக ஜொலிக்கும். சில காலம் அது அரேபியாவில் வசித்தது. கீழே பறக்காது; மிக உயரமாய்த் தான் பறக்கும். அவ்வளவு உயரத்தில் பறப்பதால் மனிதர்களால்  அந்தப் பறவையைப் பார்க்க முடியாது.  உயர்வையும், வலிமையையும் ,வெற்றியையும் குறிக்கும் ஒரு பறவை. வாழ்நாளில் ஒரு முறை கூட அதன் கால்கள் தரையில் பட்டதே கிடையாது. எந்நேரமும் பறந்துகொண்டே இருக்கும். கழுகுகளைக் காட்டிலும் பெரிய பறவை. முட்டை இடாத ஒரே பறவை.  500 ஆண்டுகள் வரை வாழும். அந்தப் பறவைக்கு மரணமே கிடையாது. இந்தப் பறவையின் அழகைக் கண்டு சூரியன் வியந்து ‘நீ என்னுடன் இரு; ஜொலித்துக்கொண்டே இருப்பாய் என்று கூறியிருக்கிறது.  அதனால் அப்பறவை சூரியன் உதிக்கும் கிழக்குத் திசை நோக்கி பறந்து சென்றதாம். அந்தப் பயணத்தின்போது காடுகள், மேடுகள், பள்ளங்கள் தாண்டி ஒரு பாலைவனத்தில் இளைப்பாறியது. அப்படி சில காலம் தங்கியதால் அதற்கு வயதாகிவிட்டது. மீண்டும் இளமைக்குத் திரும்ப சூரியனை நோக்கி பாடல் பாடியது.

ஆனால், சூரியனிட மிருந்து பதிலே வராமல் போகவே காத்திருந்து, சோர்ந்து, தான் முன்பு வசித்த இடத்திற்கே திரும்பிப் போய்விட்டது. திரும்பிச் சென்ற வழியில் இலவங்கப் பட்டைகள், உயர்ந்த வாசனைத் திரவியத்தின் இலைகள் எல்லாவற்றையும் சேகரித்தது அந்தப் பறவை. தன்னுடைய இடத்துக்கு தான் சேகரித்ததைக் கொண்டுவந்து, ஓர் உயர்ந்த பனை மரத்தில் இலவங்கப் பட்டைகளால் கூடு செய்தது. கூட்டை அந்த வாசனை மூலிகைகள் கொண்டு அலங்கரித்தது. பின்  ஒரு நல்ல வாசனையுடைய  பிசினை சேகரித்து  பந்து செய்தது.  முட்டை வடிவில் இருந்த பந்தின் மீது அமர்ந்து சூரியனை நோக்கி திரும்பவும் பாடல் பாடியது. பறவையின் பாடலைக் கேட்டு  சூரியன், பறவை இருந்த திசையை நோக்கி வெளிப்பட்டது. அப் போது சூரியக்கதிரில் இருந்து வெளிப்பட்ட ஒளி அப்பறவையின் இறகுகள் மீது பிரகாசித்தது. அந்த ஒளியின் வெப்பம் நெருப்பு போல பறவையைப் பற்றிக்கொண்டது. அதனால் அப்பறவை எரிந்து சாம்பலானது. சாம்பலுக்குள் இருந்து மீண்டும் அப்பறவை எழுந்தது. இப்படி பீனிக்ஸ் பறவையைப் பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன.

தொகுப்பு: ஆர்.சந்திரசேகர்

Related Stories: