துணை வட்டாட்சியர் உட்பட மூவருக்கு கொரோனா: திருவள்ளூர் தாலுகா அலுவலகம் மூடல்

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர், அலுவலக உதவியாளர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்பி வைக்கும் பணியும் நடந்து வருகிறது.இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருவள்ளூர் வரவைக்கப்பட்டு, அங்கிருந்து சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு வருவாய் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இப்பணியில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் துணை வட்டாட்சியர், அலுவலக உதவியாளர் உட்பட மூவருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்ததில், நோய் தொற்று நேற்று உறுதியானது. இதனையடுத்து மூவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து மூவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகமும் முழுமையாக கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து மூடப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் அலுவலகம் திறக்கப்படும் என வட்டாட்சியர் விஜயகுமாரி  தெரிவித்தார்.

Related Stories: