காங்கயத்தில் தேங்காய் பருப்பு விலை கடும் வீழ்ச்சி: தென்னை விவசாயிகள் பாதிப்பு

காங்கயம்: காங்கயம்,  வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து  உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. இந்த களங்களுக்கு அந்தந்த  பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலிருந்தும்  தேங்காய் வருவிக்கப்பட்டு மட்டை உரித்து உடைத்து உலர வைக்கும் பணிகள்  நடைபெறுகின்றன. பின்னர் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய்  எண்ணை நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள கிரஷிங்  யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இது தவிர ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட  மாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன. காங்கயம் கிரஷிங் யூனிட்டுகளில்  எண்ணெயாக மாற்றப்பட்டு எண்ணெய் டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு  வடமாநிலங்களான குஜராத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு  அனுப்பப்படுகிறது. மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்களில் அடைக்கப்பட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு  அனுப்பப்படுகிறது.

கடந்த மாதம் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.114வரை கொள்முதல் செய்யப்பட்டது. அப்போது 15 கிலோ கொண்ட 1 டின் தேங்காய்  எண்ணெய் ரூ.2 ஆயிரத்து 350 ஆக இருந்தது. அதன் பின்னர் தேங்காய் பருப்பு விலை  படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி 1 கிலோ தேங்காய்  பருப்பு ரூ.85 முதல், 88 வரை விற்பனையானது. 15 கிலோ கொண்ட எண்ணை டின் ரூ.1960 ஆயிரமாக இருந்தது. தேங்காய் பருப்பு விலை குறைவால் தேங்காய்  பருப்பின் தன்மையை பொருத்து கடந்த மாதம் விவசாயிகளிடம் ரூ. 15வரை கொள்முதல்  செய்யப்பட்ட தேங்காய்கள் தற்போது ரூ.10வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கொரோனா பிரச்னை உள்ளிட்ட காரணத்தால் வடமாநிலங்களுக்கு  காய்களாக அனுப்பவதும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக விலை குறைந்துள்ளது.  வரும் ஆடி மாதம் வரை இந்தநிலை இருக்கும். அதன் பின்னரே விலை உயர  வாய்ப்பு உள்ளது.

Related Stories: