மல்லிகை விலை வீழ்ச்சியால் பயிரிட்ட விவசாயிகள் வேதனை: அரசு நிவாரணம் வழங்குமா?

திருமங்கலம்: மல்லிகை பூ விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் பூ விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். திருமங்கலம் அருகேயுள்ள வலையங்குளம், மறவன்குளம், உச்சப்பட்டி, எட்டுநாழி, விடத்தகுளம், புளியங்குளம், தூம்பகுளம், உச்சப்பட்டி, கப்பலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர். மல்லிகை பூவிற்கு பெயர் பெற்ற மதுரை மல்லிக்கு எப்போதுமே விலை அதிகளவில் கிடைக்கும் என்பதால் திருமங்கலம் சுற்றுவட்டார விவசாயிகள் அதிகளவில் மல்லிகைபூவை பயிரிடுவது வழக்கம். தற்போது திருமண சீசன் மாதம் என்பதால் அதிக விலைக்கு போகும் என பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கொரோனாவால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமணம், கோயில் திருவிழாக்கள் நடைபெறவில்லை. இதனால் மல்லிகை வியாபாரமும் விவசாயிகளின் கைகளை கடித்து வருகிறது. திருமண சீசன் நேரங்களில் கிலோ ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாகும் மல்லிகை தற்போது கிலோ 50, 100, 200 என விற்பனையாகிறது. ஒரு கிலோ பூ பறிக்க ரூ.40 கூலி தேவைப்படும். இந்த நிலையில் பூ விலை போகாதது மல்லிகை பூ விவசாயிகளிடம் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

இது குறித்து திருமங்கலம் பகுதி மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், ‘‘மல்லிகை பூக்களை பறித்தவுடன் வியாபாரிகளிடம் விற்பனை செய்துவிடவேண்டும். ஓரிரு நாட்கள் வைத்திருந்தாலும் மலர்ந்துவிடும். ஆனால் கொரோனா ஊரடங்கினால் மார்க்கெட் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாலும், கொண்டு சென்ற தினத்தன்று விற்பனையாகாததாலும் பூ விலை போகவில்லை. இருப்பு வைக்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் போதுமான குளிர்ச்சாதன வசதிகளும் இல்லை. பூ சாகுபடியில் உரச்செலவு, களையெடுத்தல் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விலை போகாதது எங்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் இந்தாண்டு எங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு இதற்கு தக்க நிவாரணம் அறிவித்தால்தான் எங்களால் தொடர்ந்து பூ விவசாயம் செய்ய முடியும்’’ என்றனர்.

Related Stories: