செங்கோட்டை: ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் தமிழக, கேரள மாநில உறவை போற்றும் வகையில் பாண்டியன் முடிப்பு எனும் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் இரு மாநில பக்தர்களும் பங்கேற்றனர். ஐயப்பன், முருகன் இருவரும் அவதரித்தது கார்த்திகை மாதம் என்பதால் இம்மாதத்தில் இருவருக்கும் தமிழக, கேரள பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என ஆறுபடை வீடுகள் இருப்பது போன்று ஐயப்ப சுவாமிக்கும் கேரளாவில் சபரிமலை, குளத்துபுழா, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், பந்தளம் என அறுபடை வீடுகள் உள்ளன. தமிழக, கேரள மாநில உறவை போற்றும் விதமாக இரு மாநில மக்களும் இணைந்து கொண்டாடும் விழாவாக ஆரியங்காவில் உள்ள ஐயப்பன் கோவிலில் பாண்டியன் முடிப்பு என்னும் திருமண திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
தமிழக-கேரள எல்லையில் செங்கோட்டை அருகே அமைந்துள்ள ஆரியங்காவு அய்யனுக்கும், மதுரையைச் சேர்ந்த துணி வியாபாரியின் மகளான சவுராஷ்டிரா சமுதாய பெண்ணுக்கும் ஜோதி ரூபத்தில் திருமணம் நடந்ததாக புராண கதைகள் கூறுகின்றன. இரு நூற்றாண்டுகளாக இரு மாநில மக்களின் உறவினை ஒருங்கிணைக்கும் இந்த விழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் 5 நாட்கள் நடைபெறும். திருமண தடை உடையவர்கள் இங்கு தரிசனம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தாண்டு பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த விழா கடந்த 25ம் தேதியும் திருக்கல்யாண விழா நேற்று இரவும் ஆரியங்காவில் நடந்தது. திருக்கல்யாணத்திற்கு முன்னதாக இரு வீட்டாரின் நிச்சயதார்த்த விழா நடந்தது. இதில் மதுரை சவுராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பெண் வீட்டாராகவும், தேவசம்போர்டு உறுப்பினர்கள், விழா கமிட்டியினர் மணமகன் வீட்டாராகவும் பூத்தட்டுகளை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து இரவு பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த விழா நடந்தது.
இதற்காக நேற்று தேவியின் திருவுருவமான திவ்ய ஜோதி மாம்பழத்துறை கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணியளவில் கோயிலில் இருந்து பாலருவிக்கு ஊர்வலம் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு கோவிலில் மணமக்களுக்கு சகல மரியாதையுடன் நிச்சயதார்த்த விழா நடந்தது. விழாவில் கேரளா, தமிழக பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் இரவு 8 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. சவுராஷ்டிரா பெண்களைச் சந்திக்கும் கலாசார நிகழ்ச்சிகளுடன், ஐயப்பன் மாட்டு வண்டியிலும், மணப்பெண் மாம்பழத்துறை தேவியை தேர் மற்றும் பல்லக்கிலும் கோயிலைச் சுற்றி கொண்டு வந்தனர். இந்த விழாவில் கேரள, தமிழ்நாட்டின் திருமண சம்பிரதாய வழக்கங்கள் பின்பற்றப்பட்டன.
கோயிலுக்குள் கேரள சடங்குகளும், வெளியில் தமிழ் முறை சடங்குகளும் நடைபெறுவது தனிச்சிறப்பு. ஐயப்பன் கோயிலைச் சுற்றி மூன்று முறை அம்மன் பல்லக்கால் சுற்றி வந்தார். பின்னர் தேவி, ஐயப்பனின் பல்லக்குகள் இருபுறமும் வைக்கப்பட்டு மூன்று முறை மலர் மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இரவில் சவுராஷ்டிர வழக்கப்படி மாங்கல்யம் அணிவித்தல் நடந்தது. இதையடுத்து சிறப்பு பூஜைகளுடன் மண்டல பூஜை நடைபெற்றது.
