தாவரவியல் பூங்காவின் மாடத்தில் வைக்கப்பட்டுள்ள லில்லியம் மலர்கள் வாடத்துவங்கின: மேரிகோல்டு டேலியாவும் அழுகின

ஊட்டி: தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண லில்லியம் மலர்கள் வாடத்துவங்கின. அவ்வப்போது பெய்யும் மழையால் மேரிகோல்டு மற்றும் டேலியா மலர்கள் அழுக துவங்கியுள்ளன. மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் வழக்கம் போல், 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த செடிகள் அனைத்திலும் தற்போது பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக சுற்றுலா பயணிகள் வர கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. எனினும், 35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்ட மலர் செடிகளை கொண்டு மாடங்களில் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் தூய்மை பணியாளர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் இந்த மலர் அலங்காரங்களை காண அனுமதிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால், பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மேரிகோல்டு மற்றும் டேலியா மலர்கள் அழுக துவங்கியுள்ளன. அதேபோல், மாடத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண லில்லியம் மலர்களும் வாடத்துவங்கியுள்ளன. கோடை சீசன் போது, சுற்றுலா பயணிகள் வரும் வரை இது போன்று வாடிய மலர்களை அப்புறப்படுத்திவிட்டு வேறு மலர்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்படும். இம்முறை சுற்றுலா பயணிகள் வர தடையுள்ளதால், மாடங்களில் வாடிய மலர்களை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், இவை தவிர மற்ற மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

Related Stories: