வட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு: விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தகவல்

சேலம்: வட மாநிலங்களில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் அறுவடை செய்யப்படும் பெரிய வெங்காயம் இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு வட மாநிலங்களில் மழை கை கொடுத்துள்ளதால், விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் பெரிய வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதையடுத்து விளைந்த பெரிய வெங்காயத்தை மூட்டையாக கட்டி இந்தியா முழுவதும் அனுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ெகாரோனா வைரஸ் பரவியதையடுத்து வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய பெரிய வெங்காயம் வரத்து தடைப்பட்டது.இதன் காரணமாக விலை சற்று அதிகரித்தது. அதேவேளையில் சரியாக போக்குவரத்து இல்லாததால் வட மாநிலங்களில் பல்லாயிரம் டன் பெரியவெங்காயம் தேக்கமடைந்தன. இந்த நிலையில் 4ம் கட்ட ஊரடங்கில் போக்குவரத்துக்கு மத்திய, மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் இருந்து சேலம் லீ பஜார், பால்மார்க்கெட், வ.உ.சி., மார்க்கெட், சின்ன கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயம் விலை குறைந்து வருகிறது.

இது குறித்து சேலத்தை சேர்ந்த பெரிய வெங்காயம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் பெரிய வெங்காயம் தேவையை வடமாநிலங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 50 நாட்களாக வெங்காயம் வரத்து குறைந்து இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 டன் பெரிய வெங்காயம் வருகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் பெரிய வெங்காயத்தை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். அளவு பொறுத்து பெரிய வெங்காயம் 5 கிலோ ₹100 என்றும், 7 கிலோ ₹100 என்று விற்பனை செய்யப்படுகிறது.

பெரிய வெங்காயத்தை போலவே சின்ன வெங்காயம் வரத்தும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ₹60 முதல் ₹70க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக ₹40 முதல் ₹50 என விற்பனை செய்யப்படுகிறது. இரு வெங்காயத்தின் விலையும் குறைந்து வருவதால் பொதுமக்கள் கிலோ கணக்கில் வெங்காயம் வாங்கிச்செல்கின்றனர். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: